காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக எம்.எல்.ஏக்கள் கு. சின்னப்பா, ரகுராமன், பூமிநாதன், சதன் திருமலைக்குமார், மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள், உள்பட சுமார் 800 பேர் பங்கேற்றனர். அவர்கள் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சையில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகிவிட்டது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தண்ணீரை பெற்று தந்து இருக்க வேண்டும் .ஆனால் அவர்கள் இதனை செய்யவில்லை.
100 வேலை திட்டத்திற்கு தற்போது போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை .16 கோடி ஏழை எளிய மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.
100 நாள் வேலை திட்டத்திற்கு தேவை 2.70 லட்சம் கோடி ஆனால் மத்திய அரசு
நடப்பாண்டு 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளனர். இப்படியே போனால் இந்த திட்டமே இல்லாத நிலை உருவாக போகிறது.
காவிரி நதி நீர் பிரச்சினையில் இதற்கு மேல் ஒரு மாநில அரசு எதுவும் செய்ய முடியாது .மத்திய அரசு தான் இனி அழுத்தம் தர வேண்டும்,மாநில அரசு எந்த அளவிற்கு முயற்சி செய்ய வேண்டுமோ அதனை மேற்கொண்டு விட்டது.
பயிர் கருகி உள்ளதால் ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரம் நிவாரணம் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது – ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என மதிமுக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
கர்நாடக காங்கிரசை சேர்த்து தான் நாங்கள் கண்டிக்கின்றோம் – கர்நாடகா உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.கர்நாடக அரசும் குற்றவாளி தான்.
பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக எங்களின் பம்பரம் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம் ,கட்சி நிர்வாகிகள் எண்ணம். முதல்வரும் இதை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.மதவாத பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அது தான் மிக முக்கியம்.
பாஜகவை விட்டு அதிமுக வெளியே வந்ததன் காரணமாக சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்கும் என்கிற ஆசையில் தான் எடப்பாடி இருந்து வருகிறார். ஆனால் இந்த ஒரு மாதத்தில் எல்லாம் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடாது . யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிறுபான்மை மக்களுக்கு தெரியும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.