மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியை சேர்ந்தவர் போஸ் என்கிற காதர். இவர் மலேசிய நாட்டில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும், மலேசிய நாட்டுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அனுப்பி வருகிறார். இந்நிலையில் காதர் ஏற்பாட்டில் மலேசியாவுக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பஷீர் அகமது என்ற 25 வயது இளைஞர் சில மாதங்களிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு தாயகம் திரும்பி உள்ளார். சென்னையில் சிகிச்சையில் இருந்த பஷீர் அகமது ஒரு வாரத்தில் உயிரிழந்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பஷீர் அகமதுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மீது விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கை, கால்கள் நீலம் பாரித்துள்ளதாகவும் பல்வேறு இடங்களில் உடலில் காயங்கள் உள்ளதாகவும் குற்றம் சாட்டியும், அவரது மரணத்திற்கு காரணமான, வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற காதர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தமிழக அரசு மற்றும் காவல் துறையை வலியுறுத்தி மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக நிலம், நீர் பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் இரணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே 17 இயக்கம், நீலப்புலிகள் இயக்கம், தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.