மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை:- சம்பவ இடத்தில் நாகை மாவட்ட எஸ்பி ஹர்ஷ் சிங் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான ராமதாஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற வானவெடி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு நாட்டு வெடிகள், திருமணத்திற்கு தேவையான வானவெடிகள் ஆகியன தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு வானவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இந்த தொழிற்சாலையில் 11 பேர் வேலை பார்த்து வந்த நிலையில் இன்று 7 பேர் மட்டுமே வேலை பார்த்து உள்ளனர். இந்த நிலையில் வெடிகுடோனில் வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட திடீர் விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதனால், சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு பலத்த வெடி சத்தம் கேட்டதுடன், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது . இந்த விபத்தில் வெடி குடோனில் பணியாற்றிய நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். வெடி வெடித்து சிதறிய உடல்கள் 50 மீட்டர் தூரம் வரை 18க்கு மேற்பட்ட இடங்களில் சிதறி கிடக்கிறது. இறந்தவர்களின் உடலை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொறையார் போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடி விபத்தில் தரங்கம்பாடி தாலுக்கா கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை மதன், நிகேஸ், ராகவன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் ஆகிய மூன்று பேர் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். நாட்டு வெடி தயாரிப்பின் போது நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துள்ளது. மேலும் வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.