மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று கோர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த கிடங்கில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த கர்ணன் என்பவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் லட்சுமணன் என்பவர் திருவாரூர் அரசு மேல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமார், கலியபெருமாள் ஆகிய 2 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த கர்ணன், லட்சுமணன் ஆகிய இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரணத் தொகையை வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏ நிவேதா முருகன், முன்னாள் எம்பி ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
