மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம். அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல் ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இறங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் இறுதி நிகழ்ச்சியாக
கடைமுக தீர்த்தவாரி முடிவடைந்த மறுநாள், கார்த்திகை 1ம் தேதி காவிரியில் நீராடிய பலனை அளித்தார்.
அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் நாள், முடவன் முழுக்கு ஐதீக திருவிழாவான முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து மனோன்மணி உடனாகிய சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருளினார். அங்கு அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். பின்னர் சுவாமி அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.