மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள, நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில்
பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பல்வேறு சிறப்புகளையுடைய இந்த ஆலயத்தில் மாசிமக பெருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சாமி புறப்பாடு வீதி உலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளன்று பஞ்ச மூர்த்;திகளின் தெருவடச்சான் ஒலைசப்பரங்கள் வீதியுலா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதர் சுவாமி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர், அஸ்திரதேவர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி அம்பாளுக்கு ஷோடச தீபாராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் தன்னைத் தானே பூஜித்தல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ஆலயத்தை சுற்றி வந்து சிறப்பு ஹோமம் பூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் தெருவடச்சான் ஓலை சப்பரங்களில் எழுந்தருளினர்.
மயில் வாகனத்தில் முருகப்பெருமானும், மூஷீச வாகனத்தில் விநாயகரும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் வானவேடிக்கை பட்டாசு முழக்கத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தெருவடச்சான் ஒலைசப்பரம் வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருகின்ற ஐந்தாம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டமும் ஆறாம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.