மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான, இங்கு பங்குனி உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விடிய விடிய நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆலய தீர்த்த குளமான, சந்திரபுஷ்கரணி தீர்த்தத்திற்கு, பெருமாள், தாயாருடன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளினார். அங்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார். தொடர்ந்து 3முறை தெப்பம் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.