மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத
விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் ஆகிய ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள் மற்றும் திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் ஆகியோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.