மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர். பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் ஆடிப்பூர வளையல் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல வண்ண நிறத்தில் மூலவருக்கும் உற்சவருக்கும் பல்லாயிரக்கணக்கான வளையல்கள் அணிவித்து ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.