மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய விழாவான அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது . அதையொட்டி சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். மாலை மாற்று உற்சவத்துடன் சீர்வரிசை எடுத்துவர திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது . இதில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.