மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை வேளாண்துறை மின்சார துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் குருவை சாகுபடிக்கு தேவையான மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நீர்நிலைகளை பாதிக்கும் ஒருங்கிணைந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2023 திரும்ப பெற வலியுறுத்தியும், சரி ஊட்டப்பட்ட அரிசியை எந்த ஒரு ஆய்வு செய்யாமல் மக்களுக்கு விநியோகிப்பதை கண்டித்தும் முழக்கமிட்டனர். தொடர்ந்து இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு போதிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்குவதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில் சரி ஊட்டப்பட்ட அரிசியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளில் ஒரு பிரிவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு வாயிலில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கண்டித்தும், புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது