மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மறையூர் ஊராட்சியில் உள்ள கோவங்குடி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. 100 குடும்பங்களுக்கு ஒரு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால், அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதியில் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும், போதுமான அளவு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி மறையூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர். இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த கட்சியின் மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஆனந்தன், லூர்துசாமி மற்றும் கிராம மக்களிடம் மயிலாடுதுறை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாசுந்தரி, காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையில் குத்தாலம் போலீஸார் மற்றும் ஊராட்சி தலைவர் கருணாநிதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முடிவில், கோவங்குடியில் 6 வாரங்களில் புதிய சாலை அமைத்துத் தரப்படும், குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்ற அதிகாரிகளின் எழுத்து பூர்வ உறுதிமொழியை ஏற்று போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.