மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு உள்ள சிவன் மற்றும் சாந்தநாயகி அம்மனை வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. மேலும் அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான
புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. இத்தகைய பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த மாதம் 23ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் விதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் உற்சவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்காக கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாள் திருமணக்கோலத்தில் எழுந்தருளினர். பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து வேதியர்கள் மந்திரம் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பட்டாடை சாத்தப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு அலங்கார தீபம் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் மணக்கோலத்தில் காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். விழாவின் சிகரநிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 3ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.