மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேச விழா கடந்த 20ம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்று வந்தது. 11ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
தருமை ஆதீனம் திருஆபரணங்கள், தங்க பாதரட்சை அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வரமேள தாளங்கள், சென்டைமேளம் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலியாட்டாம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன மடாதிபதிக்கு பொதுமக்கள் வீடுகளில் பூரணகும்ப வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார். இவ்விழாவில் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். பட்டணபிரவேசம் முடிவடைந்து ஆதீன மடாதிபதி ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பட்டணபிரவேச நிகழ்ச்சியையொட்டி தருமபுர ஆதீன மடத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
.