நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38 வந்து மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மன்னம்பந்தல் ஊராட்சி பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதன் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே கட்டப்படும் என அறிவித்தார். இதனிடையே ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர். மூன்றடுக்கு கொண்ட சுமார் 36,000 சதுர அடி பரப்பளவில் இந்த கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும் ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு விரைந்து திறப்பு விழா நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.