மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல்(ஊரகம்) ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்களில் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஏற்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து மூன்றாம் தேதி அன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியின் சார்பாக நகராட்சியுடன் இணைக்கும் அரசின் முடிவை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊராட்சியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்ட நிலையில்
அதன் ஒரு பகுதியில் பந்தல் அமைத்து அப்பகுதி மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மற்றும் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்து சென்றனர். மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.