மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் மூன்றாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகள் பாதயாத்திரை ஆக கொற்கைக்கு சென்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டிருந்த ஆதீன மடாதிபதிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற சோதனையில் மஞ்சள் காமாலை மற்றும் பித்தப்பையில் கல் உள்ளது கண்டறியப்பட்டது. நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட ஆதீன மடாதிபதிக்கு இன்று காலை சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மருத்துவமனையில் இருந்து நேராக கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி திரும்பினார். வழக்கமான சொக்கநாதர் பூஜையில் ஈடுபடுவார் என்றும் பார்வையாளர்கள் குரு மகா சன்னிதானத்தை பார்ப்பதற்கும் ஆசி பெறுவதற்கும் வர வேண்டாம் என்று ஆதின பொது மேலாளர் மணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.