மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு யுகங்களாக இந்திரன் சூரியன் பத்ரகாளியம்மன் நண்டு ஆகியவை பூஜித்ததாக வரலாறு. இறைவன் சுயம்புவாக அருள் பாலிக்கும் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆறு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, யாக சாலையில் பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள்,
தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில்
மங்கள சின்னங்கள் முன்செல்ல புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சோமநாத சுவாமி மற்றும் வேயுறு தோளியம்மன் உள்ளிட்ட சுவாமி சந்ததிகளில் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.