மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அர்ச்சனா (26). வானகிரியை சேர்ந்த முருகப்பன் (28) என்பவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 7 வயதில் ஹர்ஷித் என்கிற மகனும், இரண்டரை வயதில் ஷிவியாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். தொடக்கத்தில் வரதட்சணை வேண்டாம் என்றவர்கள் திருமணம் முடிந்த பின்னர் ஆறு வருடங்களில் 18 பவுன் வரை வரதட்சணையாக பெற்றுள்ளனர். மகள் பிறந்தவுடன் மீண்டும் வரதட்சனை கேட்டுள்ளனர். ஆனால் செல்வகுமார் குடும்பத்தினரால் மேலும் வரதட்சணை வழங்க முடியாததால், கடந்த 3வருடங்களுக்கு மேலாக அவர்களை தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்றும் அர்ச்சனாவையும் பிறந்து வீட்டுக்கு அனுப்பாமலும் இருந்துள்ளனர்.
நேற்று முருகப்பனின் உறவினர்கள் அர்ச்சனா குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு, அர்ச்சனா விஷம் குடித்து இறந்துவிட்டதாகவும், அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் வந்து பார்த்தபோது அர்ச்சனா கழுத்து பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அர்ச்சனாவை முருகப்பன் மற்றும் அவரது பெற்றோர் அடித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதாக குற்றம் சாட்டியும், உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அர்ச்சனாவின் இரண்டு குழந்தைகளையும் கொண்டு வந்து ஒப்படைக்கவும் வலியுறுத்தி அர்ச்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை சவக்கிடங்கின் முன்பு அமர்ந்து ஓர் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் உரிய தீர்வு காணப்படாமல் அர்ச்சனாவின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.