மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன். டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ளார் .
இவர் தலைமையில் கடந்த11-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அனைத்து விவசாயிகளையும் காத்திருப்போர் அறையில் அமர ஏற்பாடு செய்தார். மேலும் ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் அமைச்சர் மற்றும் ஆட்சியரை சந்திக்கலாம் என்றும் விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் முடிந்து அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்களை விவசாய சங்க தலைவர் அன்பழகன் தலைமையில் அனைத்து விவசாயிகளும் சந்தித்து, வேளாண் துறையினரின் மெத்தனப்போக்கால் தங்களுக்கு பயிர்க்காப்பீடு கிடைக்கவில்லை என முறையிட்டனர். இதுகுறித்து உரிய தீர்வு காணப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
, கடந்த 15-ஆம் தேதி மயிலாடுதுறை நகரப் பூங்காவில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 20 ஆம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தவதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அன்பழகன் பேசியது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசரஸ்வதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் அரசு அதிகாரிகளை அவதூறாக பேசியதுடன், விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீஸார் அரசு ஊழியர்களை அவதூறாக பேசியது, அரசுக்கு எதிராக விவசாயிகளை போராடத் தூண்டியது ஆகிய 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையில் இன்று அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.