மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறுவை அறுவடை பணிகள் மும்முரமாகி வருகிறது. . இந்நிலையில் ஒருசில இடங்களில் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் ஒருசில பகுதியில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டது. மழைநீர் தேங்கி அதிக ஈரப்பதம் ஏற்பட்டிருந்தது. இதனால் அறுவடைப் பணி ஒருசில தினங்கள் பாதிக்கப்பட்டது, அறுவடை எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2400 என வாடகை வசூல் செய்கின்றனர். ஈரப்பதம் அதிகமாக உள்ள
வயல்களில் ஏக்கர் ஒரு மணி நேரத்தில் செய்த அறுவடை மேலும் 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் அதிகரித்துள்ளது, இந்த மழை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏக்கர் ஒன்றிற்கு 2400 கிகி. முதல் 3000 கிகி வரை மகசூல் ஆகியுள்ளது. மகசூலில் இந்த ஆண்டு பாதிப்பில்லை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 90,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 45 சதவீதம் அறுவடை முடிவுற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் 119 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது . 1 லட்சத்து 39 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைகள் இருந்தால் விவசாயிகள் 04364-211054 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி தெரிவித்துள்ளார்.