மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர். ஆற்றில் மூழ்கி இறந்தது மருதூர் லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (62) என்பது தெரியவந்தது. செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் செல்வராஜின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு செல்வராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி காரியங்களுக்கு பிறகு உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர். இந்நிலையில் வெளியூரிலிரந்து மருதூர் கிராமத்திற்கு செல்வராஜ் வந்துள்ளார். செல்வராஜ் உயிரோடு வந்து நின்றதை கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். செல்வராஜ் என்று கருதி அடையாளம் தெரியாத உடலை தகனம் செய்தது தெரிய வந்தது. செல்வராஜ் மனைவி சாந்தி மகன் மற்றும்’ மகள்கள் மாந்தை கிராமத்தில் தற்போது வசித்துவரும் நிலையில் செல்வராஜ் தனது சொந்த ஊரான மருதூர் பகுதிக்கு வந்துவிட்டு சில நாட்களில் ஈரோட்டில் உள்ள தனது முதலாளியை பார்க்க சென்று அங்கே வேலை செய்ததாகவும் மீண்டும்’ ஊருக்கு வந்தபோது தன்னை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் தான் இறந்துவிட்டதாக ஆற்றில் மிதந்துவந்த உடலை பெற்று குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர் என்றும் கூறிய செல்வராஜ் தனது குடும்பத்தினரிடம் 30 படைத்துவிட்டீர்களா சரக்கு வைத்து படைத்திருப்பீர்கள் எங்கே சரக்கு என்று கேட்டதாகவும் சிரித்துகொண்டே கூறிய செல்வராஜ் நான் 100 வயதில் சாவேன் எனக்கு இப்போது சாவு இல்லை என்று தெரிவித்தார். உயிருடன் உள்ள நபர் இறந்துவிட்டதாக கருதி யார் என்று தெரியாத உடல் தகனம் செய்யப்பட்டதால் இச்சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்