மயிலாடுதுறை பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகாரின்பேரில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் உள்ள பாரில் காலை 11.20 மணியளவில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். டாஸ்மாக் கடைதிறக்க 12 மணிக்கு முன்னரே கள்ளத்தனமாக பாரில் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கள்ள மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்ட டபீர் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரை போலீஸார் கைது செய்ததுடன், அவர் விற்று மீதமிருந்த 55 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை நகரில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளிலும் காலைமுதல் நள்ளிரவுவரை பார் இயங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.
