Skip to content

மயிலாடுதுறை காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்… கோரிக்கை

மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடைத் திட்டம் 2007-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பாதாளசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி வழியாக சாக்கடை நீர் வெளியேறி சாலையில் தேங்கியும் ஆறு, குளம் வாய்கால்களில் கலந்து வருகிறது. மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து அதிக அளவில் சாக்கடை நீர் பொங்கி வெளியேறி காவிரி ஆற்றில் கலந்துவருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறைக்கு வந்த இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் ஜி காவிரி ஆற்றில் பாதாள சாக்கடைநீர் வழிந்தோடி சுகாதாரசீர்கேடாக மாறிய காவிரிதுலாக்கட்டத்தில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் காவிரி ஆற்றில் இறங்கி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது…

உலகிலேயே நதியை புனிதமாக போற்றுவது பாரத நாடு. ஆனால், இந்த நாட்டில்தான் நதியை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அசுத்தப்படுத்துவது அதிகம் என்பதற்கு மயிலாடுதுறை காவிரி ஆறு ஒரு உதாரணம். இதைத்தான் இங்கு காவிரியில் காண முடிகிறது. பொதுவாக பக்தர்கள் காசிக்கு சென்று கங்கையில் புனித நீராடி புண்ணியம் சேர்ப்பார்கள். ஆனால், கங்கை நதியே தனது பாவங்கள் தீர மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் புனித நீராடியதாக ஐதீகம். இதனால் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து புனித நீராடிச் செல்வர். மாற்றுத் திறனாளிகள் புனித நீராடுவதற்காக முடவன் முழுக்கு என கொண்டாடுவது மயிலாடுதுறையில்தான். இத்தனை புனிதம்வாய்ந்த காவிரி நதியில், பாதாளசாக்கடை கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. பாதாளசாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக ஆறுபாதியில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நகராட்சியின் பொறுப்பின்னை மற்றும் கவனக்குறைவு காரணமாக புனிதம் வாய்ந்த இந்த நதியை இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளனர். இந்து முன்னணி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. தேவைப்பட்டால் இதைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். உடனடியாக நகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு காவிரி நதியை மீண்டும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!