மயிலாடுதுறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகத்துடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தேசிய பசுமை படையும் இணைந்து நடத்திய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பெண்களுக்கான போட்டியை மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, ஆண்களுக்கான போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட 18 வயதுக்கு மேற்பட்ட
அனைத்து பிரிவினர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவாக போட்டியில் பங்கேற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இப்பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.