மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வாகனங்கள் மோதிக்கொண்டது. இதில் ஒரு இரு சக்கர வாகனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வாகனத்தின் சொந்தக்காரருக்கு காவல் துறையில் ஒரு நண்பர் இருந்தார். எனவே அவர் உடனடியாக போலீசுக்கு சென்றார். அந்த நண்பர் சீர்காழி பகுதியில் NBW வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளிகளை தேடி பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையில் ஏட்டாக பணியாற்றி வந்தார். அவரது பெயர் பிரபாகரன்.
பாதிக்கப்பட்ட வாகனத்தை சீர்செய்து கொடுத்து விடவேண்டும் என பேசிமுடித்தார் ஏட்டு பிரபாகரன். அதன்படி ஒர்க்ஷாப் செலவான ரூ.4800ஐ அவர் பட்டறையில் செலுத்தி விட்டார். இத்துடன் விவகாரம் முடிந்து விட்டது என அவர் கிளம்பி சென்றார். அன்று இரவு அவருக்குஒரு போன் வந்தது. அதில் ஏட்டு பி்ரபாகரன் பேசி்னார். ரூ.4800 ரூபாய் கொடுத்துட்டா பிரச்னை முடிஞ்சிட்டா, மேலும் 5 ஆயிரம் எனக்கு போட்டு விடு. பாதிக்கபட்டவருக்கு கொடுக்கத்தான் கேட்கிறேன். எனக்கு இல்லை. இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி எல்லாம் எனக்கு வேண்டியவங்க தான் என்று போனில் பேசுகிறார்.
இந்த ஆடியோவை சம்பந்தப்பட்ட நபர் பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார். தற்போது மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவி வருகிறது.
இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா விசாரணை நடத்தினார். பிரபாகரன் பேசி பணம் பறிக்க முயன்றது உண்மை தான் என தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஏட்டு பிரபாகரன் மீது நடவடிக்கை எடுத்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதைவிட இன்னொரு கொடூரமும் சீர்காழி போலீசில் தான் அரங்கேறி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ்காரர் மரிய ஜோசப் என்பவர் அகணி என்ற கிராமத்தில் பெண் சாராய வியாபாரி வீட்டிற்கு ரெய்டு நடத்த சென்று உள்ளார். அப்போது மரியஜோசப்பும் போதையில் இருந்து உள்ளார்.
சாராய வியாபாரி வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் உள்ள ஒரு இளம்பெண் வீட்டுக்குள் அவர் புகுந்து விட்டார். அந்த பெண்ணை பார்த்த போலீஸ்காருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து உள்ளார். அவர் கூச்சல் போட, ஊர் மக்கள் ஒன்று திரண்டு வந்து போலீஸ்காரரை கவனிக்க, அவருக்கு ஏறிய போதை எல்லாம் இறங்கி ஓட்டம் பிடிக்க முயன்றார்.
ஆனால் அவரை பொதுமக்கள் விடவில்லை. சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் கூறினர், சீர்காழி போலீசார் வந்து மரிய ஜோசப்பை அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மரியஜோசப்பும் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் ..