பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, பெரம்பூர் பள்ளி வளாகத்தில் அவரது உடல் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது உறவினர்களை சந்தித்து, மாயாவதி ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் மாயாவதி கூறியதாவது.. ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இன்னும் உண்மையான குற்றவாளியை பிடிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். அரசு தீவிரமாக செயல்பட்டு இருந்தால் உண்மையான குற்றவாளியை பிடித்திருக்கலாம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். மாநில அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார்.
