விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90 சதவிகிதம் பணி நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பெண்கள், ஆண்கள், மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் அமருவதற்கு தனித்தனியாக பார்டீசியன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 30 மொபைல் டாய்லெட் அமைக்கும் பணியும், 300 குடிநீர் வாட்டர் டேங்க், புல் தரைகள் மீது கிரீன் மேட் போடுவதும், இருக்கைகள் அமைப்பது என அனைத்துப் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மாநாடு நல்லபடியாக நடக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்யின் தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகர் ஆகியோர் சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அத்துடன் அன்னதானமும் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் செய்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “மாநாடு ரொம்ப சிறப்பாக நடக்கனும். எங்கள் தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்கனும். அவர் பெரிய நிலமைக்கு வரனும். தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்