பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். பதவிக்காலம் நீ்ட்டிக்கப்பட்ட பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. உண்மையில், 100 நாள் வேலைத்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றுக்கான மத்திய அரசு நிதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்கிறது. அதுபற்றிய விசாரணை தொடங்கப்பட்டவுடன், மத்திய அரசு மீது வீண்பழி போடுகிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால், மக்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். கொல்கத்தா ஐகோர்ட்டின் சில தீர்ப்புகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராததற்காக அவர்கள் போராடுவது வெட்கக்கேடு என்று அவர் பேசினார்.