Skip to content
Home » மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் நடு இரவு நள்ளிரவில் நடைபெற்றது. இதில் சயன ரூபத்தில் அம்மனின் திருவுருவம் அமைக்கப்பட்டு, அம்மனின் காலடியில் அசுரனின் கோர உருவம், ஒரு கையில் கபாலம், மற்றொரு கையில் எலும்பு துண்டு வைக்கப்பட்ட அம்மனின் உருவத்திற்கு பட்டுப் புடவை போர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது,

அம்மனின் திரு உருவத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் காவலாக நிற்கும் மகாமுனி,காட்டு முனி, கடுஞ்செழியன், பேச்சி முனி போன்ற தெய்வங்களுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது.ஆழியார் ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டதை அடுத்து ,திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பக்தர்கள்

காணிக்கையாக கொடுத்த மாலை சேலை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது,

அப்போது அங்கு இருந்த பம்பை காரர்கள் பம்பை அடித்தபடியே மாசாணி அம்மனின் மயான தோற்ற கதையை அங்கு உள்ளவர்களுக்கு கூறும்பொழுது…. அருள் வந்த அருளாளி அம்மனின் மணல் உருவத்தை கலைத்து, சூலாயுதத்தை எடுத்து, வாயில் எலும்பு துண்டு கவ்விக்கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடி காட்சியளித்தார்.

பின்பு அங்கிருந்து எடுக்கப்பட்ட மண்ணை கலசத்தில் சேகரிக்கப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் மயான பூஜைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு வருகின்ற திங்கட்கிழமை ஆறாம் தேதி காலை நடைபெற உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!