கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு, கூவும் குயிலும் கருப்புதான், வைரம் கருப்புதான், மழை மேகம் கூட கருப்புதான் என கருப்பு நிறத்தின் மீது மக்களுக்கு அலாதி பிரியம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் பாடல் எழுதியிருந்தாலும், இன்னும் ஏனோ சிலர் கருப்பு நிறத்தை வெறுக்கத்தான் செய்கிறார்கள். இதனை திருமண சந்தையில் நன்றாக உணரமுடியும்.
பொண்ணு கருப்பா இருந்தாலும், களையா இருக்கா என்று சொல்வார்கள். இதில் கருப்பா இருந்தாலும் என்ற வார்த்தையின் பொருளே…. கருப்பு இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுகிறது் என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழ் நாட்டிலேயே பல இடங்களில் இந்த நிலை தான் என்றால் உபியில் கேட்கவா வேண்டும்.?
மாப்பிள்ளை கருப்பு என்பதற்காக அந்த மாப்பிள்ளை வேண்டாம் என உதறி விட்டார் மணமகள். உத்தரபிரதேச மாநிலம் சவுசாம்பி மாவட்டம் பிப்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷெர்பூரில் கடந்த 29ம் தேதி ஒரு . திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது.
திருமண நாளில் மணமகன் ஒரு பெரிய ஊர்வலமாக பெண்ணின் வீட்டிற்கு வந்தார். மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடைக்கு வரும் வரை எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு இருந்தது. மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடையை அடைந்தது மாப்பிள்ளையை பார்த்தவுடன் மாலை அணிவிக்க மறுத்துவிட்டார்.
திடீர் என மணப்பெண் நிராகரித்தது அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மணப்பெண்ணின் முடிவு குறித்து கேட்டதற்கு, இவ்வளவு கருப்பான இளைஞரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று பதிலளித்தார். மணப்பெண் திருமணம் செய்ய மறுத்ததால், திருமண வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. பலர் அவள் மனதை மாற்ற முயன்றனர். ஆனால் மணமகள் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.அவரது முடிவை மாற்றுமாறு அவரது குடும்பத்தினர் வற்புறுத்த முயன்றும் பலனில்லை. பின்னர், பஞ்சாயத்து கூட்டப்பட்டு, மணமகளை மீண்டும் சமாதானப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இறுதியாக மணமகன் தரப்பு மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. திருமணம் நின்றது. மணமகளின் இந்த முடிவு பலத்த விமர்சனங்களைப் பெற்றது. சிலர் அவள் செய்தது சரி என்றும், சிலர் தவறு என்றும் விமர்சித்தனர். யாரை திருமணம் செய்வது என்பது பெண்ணின் விருப்பம் என மணமகளின் முடிவை சிலர் பாராட்டியுள்ளனர்.தோலின் நிறத்தை வைத்து ஆளுமையை அளப்பது சரியல்ல என்று சிலர் விமர்சித்தனர்.