கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- பாலாமணி தம்பதியரின் மகள் கிருத்திகா(25) என்பவருக்கும், க. பரமத்தி எலவனூரை சேர்ந்த செல்வகுமார் என்ற பைனான்சியருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பிறகு பைனான்சியர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தங்கி குடும்பத்துடன் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கிருத்திகா அடிக்கடி, அம்மா வீட்டுக்கு போய்வருகிறேன் என கூறி செல்வார். ஒருமுறை கணவர் நானும் வருகிறேன் என்றாராம். அதற்கு அவர் நீங்கள் வேண்டாம் நான் மட்டும் போய் வருகிறேன் என கூறிச்செல்வாராம். இதனால் மனைவியின் நடத்தையில் பைனான்சியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
கடந்த 2023 ம் ஆண்டு அம்மா பாலாமணியை பார்க்க செல்வதாக கூறி கரூர் மாவட்டம் எலவனூர் கதர் மங்கலம் பகுதிக்கு சென்ற கிருத்திகா அங்கு வீட்டின் பீரோவில் இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பல நாட்கள் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.
கிருத்திகாவை தொடர்பு புள்ள முயற்சித்த போது அவர் போன் அழைப்பை ஏற்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்து, கிருத்திகா வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார் . அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, கிருத்திகை குடும்பத்தினர் வீட்டை காலி செய்து சென்று விட்டதாக கூறியுள்ளனர்.
பிறகு உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்ததன் அடிப்படையில், சுல்தான்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட செஞ்சேரிமலை பகுதியில், தலைமறைவாக இருந்ததை கண்டறிந்து, சேர்ந்து, வாழ அழைத்தும் வர மறுத்துள்ளார்.
பின்னர் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை கேட்டதற்கு தன்னைத் துன்புறுத்தியதாக புகார் அளிப்பேன் என மிரட்டி உள்ளார்.
இதன் பின்னர் தான் திருமணம் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பைனான்சியர் சின்ன தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளாததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் விசாரணைக்கு ஆஜரான கிருத்திகா தான் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் கணவரிடமிருந்து விவாகரத்து ஏதும் பெறவில்லை. எனவும் தான் விரும்பியவர்களுடன் வாழ்வேன் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. கிருத்திகாவின் நடவடிக்கைகளை பார்த்த போலீசார் இது பெரிய விவகாரம் போல இருக்கு. இந்த சனியன் நமக்கு எதுக்கு என அவர்கள் தொடர் விசாரணை செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிருத்திகா பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் பைனான்சியரிடம் பணம் பறிக்கும் நோக்கில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் , தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். அதில் தன் புகார் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறி இருந்தார்.
இதன் பின்னரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் செல்வகுமார் , சின்னதாராபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் , கிருத்திகா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார் .அதைத்தொடர்ந்து கிருத்திகா மற்றும் அவரது தாய் பாலாமணி ஆகியோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சின்னதாபுரம் காவல் துறையினர் பாலாமணி(58) கிருத்திகா ஆகிய இருவரையும் விசாரணைக்கு சின்னதாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். சின்னதாராபுரம் போலீசார் கிருத்திகாவை கைது செய்து க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அனுப்பினர்.
பின்னர் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தோசம் முன்பு ஆஜர் படுத்தி 15 நாள் காவலில்,திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.