மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவை சேர்ந்தவர் ஜீவா மகன் சிவசந்திரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது நிஷாந்தி என்பவர் தான் டாக்டராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக சிவசந்திரனிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் பழகி வந்தனர். நாளடைவில் காதல் அரும்பியது.
அரும்பிய காதல் பூவாக மலர்ந்து கல்யாணம் வரை சென்றது. கடந்த 20-ந் தேதி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிவசந்திரன்-நிஷாந்திக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. டாக்டரை திருமணம் செய்த மகிழ்ச்சி சிவசந்திரனுக்கு.
தன் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். லைக்குக்காக அல்ல. தான் டாக்டரை திருமணம் செய்யும் அளவுக்கு உயர்ந்து விட்டதாக கருதி பதிவிட்டார். அங்கு தான் இவருக்கு பிரச்னை பிள்ளையார் சுழி போடப்போகிறது என்பதை அறியாமல் இருந்தார்.
சிவசந்திரன், டாக்டர் நிஷாந்தி திருமண படங்களை சமூக வலைதளத்தில் பார்த்த சீர்காழி அருகே உள்ள புத்தூர் தங்கராசு மகன் நெப்போலியன் ( 34) அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சீர்காழி மகளிர் போலீசிலும் புகார் செய்தார்.
ஒவருவரின் திருமணத்தை பார்த்து இன்னொருவர் பொறாமைப்படலாம். ஏன் அதிர்ச்சி அடைந்தார். போலீசில் புகார் செய்தார்? அங்க தான் இருக்கு ட்விஸ்ட்.
நெப்போலியன் போலீசில் அளித்த புகாரில், 2017-ம் ஆண்டு மீரா என்ற பெயரில் இதே பெண்ணை நான் திருமணம் செய்தேன். அதுவும் காதலித்து திருமணம் செய்தோம்.
திருமணத்திற்கு பின் சென்னையில் வசித்து வந்தோம். 2021ம் ஆண்டு இந்த மீரா சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகி விட்டார். கையில் அகப்பட்ட நகை, பணத்தை வாரிக்கொண்டு போனவர் தான். அதன் பிறகு பல இடங்களில் தேடியும் இவர் கிடைக்கவில்லை. இப்போது டாக்டர் என்று கூறிக்கொண்டு இன்னொரு திருமணம் செய்து உள்ளார். இது குறித்து விசாரிக்க வேண்டும். அந்த மீரா என்னுடைய மனைவிதான்.
இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே டாக்டர் நிஷாந்தியும், சிவசந்திரனும் தேனிலவுக்காக வெளி மாநிலங்கள் செல்ல ஆயத்தமாகிக்கொண்டு இருந்தனர்.
திடீரென சீர்காழி பெண் போலீசார் ஜீப்பில் சிவசந்திரன் வீட்டு முன் வந்து இறங்கினர். மனைவி டாக்டர் என்பதால், போலீசார் திருமணத்திற்கு வர முடியாமல் இப்போது கிப்ட் கொண்டு வந்திருப்பார்கள் என நினைத்து மகிழ்ச்சியுடன் போலீசாரை வரவேற்றார் சிவசந்திரன்.
ஆனால் போலீசாரோ கணவன், மனைவி இருவரையும் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு டாக்டர் நிஷாந்திக்கு விருந்தே வைத்து விட்டனர். போலீஸ் கொடுத்த விருந்தில் தான் சிவசந்திரனுக்கு மட்டுமல்ல, அந்த ஊருக்கே உண்மை புலப்பட்டது.
டாக்டர் நிஷாந்தி என்ற பெயரில் சிவசந்திரனை திருமணம் செய்த பெண்ணின் உண்மையான பெயர் லட்சுமி. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த வர். இவருக்கும், அருகில் உள்ள பழையாறு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கும் கடந்த 2017-ம்ஆண்டு பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது.இவர்களுக்கு தர்ஷன் என்கின்ற மகனும், ரேணுகா என்கின்ற மகளும் பிறந்தனர்.
சில வருடங்களுக்கு முன் கணவர் சிலம்பரசன் இறந்து விட்டார். எனவே லட்சுமி, பெண்குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டுவிட்டு, ஆண் குழந்தையுடன் கொடியம்பாளையத்தில் உள்ள இவரது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். வாழ்க்கை போராட்டமானது. என்ன செய்வது என்று யோசித்தபோது தான் பலவரையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கிடைத்ததை வாரிக்கொண்டு ஓடுவது என்ற திட்டத்தை வகுத்தார் லட்சுமி.
அதற்காக முதன் முதலில் தேர்வு செய்த பெயர் தான் மீரா. 2017-ம் ஆண்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்துவிட்டு 2021-ம் ஆண்டு தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ராஜாவிடம் தான் டாக்டர் என கூறி குடும்ப நடத்தி அங்கிருந்தும் வாரிக்கொண்டு ஓடிவிட்டார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் லட்சுமி என்கிற மீரா என்கிற டாக்டர் நிஷாந்தி 4 திருமணம் செய்தது தெரியவந்து உள்ளது. இன்னும் எத்தனை திருமணம் செய்தார். எத்தனை பேரை ஏமாற்றினார் என்பது போக போகத் தெரியவரும்
நெப்போலியனின் புகாரைத் தொடர்ந்து லட்சுமியின் சுயரூபம் தெரியவந்தது. இதனால் வங்கி ஊழியர் சிவசந்திரன் இந்த அளவோடு தப்பித்தோம் என நினைத்து கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். தேனிலவுக்கு செல்லலாம் என கனவு கண்டு கொண்டிருந்த சிவசந்திரன் கனவு கலைந்தது. போலி டாக்டர் நிஷாந்தி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டார்.
.