Skip to content
Home » அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,462 சிறிய மற்றும் பெரிய திருக்கோவில்கள் உள்ளன. இதில் 8 திருக்கோவில்களில் மதிய அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கால பூஜை 261 திருக்கோவில்களில் நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில், திருமழபாடி அருள்மிகு வைத்தியாத சுவாமி திருக்கோவில், காமரசவல்லி அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், அரியலூர் அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவில், கீழையூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், உடையார்பாளையம் அருள்மிகு பயறனீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற திருக்கோவில்கள் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த இரண்டாண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்திலும் கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 186 திருக்கோவில்களில் பணிபுரியும் 186 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுடன் திருக்கோவில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஓய்வூபெற்ற இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் 24 நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், திருக்கோவில் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 42 திருக்கோவில்களில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும், திருக்கோவில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று திருக்கோவில் பணியாளர்களுக்கு 2 சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவில்களில் பணிபுரியும் 26 ஆண் பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பணியாளர் என மொத்தம் 27 பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு 04.12.2022 அன்று சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில் திருமண மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட ஏழை, எளிய இணைகளுக்கு திருக்கோவில்களில் இலவசத் திருமணம் நடத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோவிலில் 1 இணைகளுக்கும், கீழப்பழுவூர் அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவிலில் 1 இணைகளுக்கும், செந்துறை அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 1 இணைகளுக்கும் என மொத்தம் 3 ஏழை, எளிய இணைகளுக்கு இலவசத் திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 23.02.2022 அன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே, திருக்கோவில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு ரூ.20,000 செலவிடப்பட்டு வந்தது. தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இத்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்ற மேற்கண்ட 3 இணைகளுக்கும் திருமண நாளன்று ஒவ்வொருவருக்கும் தலா திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டு நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்சி, பூஜைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு இணைகளுக்கும் தலா ரூ.50,000 மதிப்பில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், ஏழை, எளிய பெற்றோர்களுக்கு திருமண செலவினால் ஏற்படும் கஷ்டத்தை கருத்தில்கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோவில்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க நடத்தப்படும் ஏழை, எளியவர்களுக்கான இலவசத் திருமணத் திட்டத்தால் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனை ஏழை, எளிய பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *