கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (34) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பது தெரிந்து கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகியோர் சிவகாசியை சேர்ந்த பொன்தேவியை கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள விக்னேஸ்வரன் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து பேசி திருமணம் முடித்துள்ளனர்.
திருமணம் முடிந்த 3-வது நாள் சிவகாசியில் சித்தி வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி விக்னேஸ்வரனை அழைத்துக் கொண்டு பொன் தேவி சென்றுள்ளார். அங்கு சித்தியின்
மகளுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு 8,500 பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.
நீண்ட நேரம் ஆனதால் மனைவியை காணவில்லை என்று விக்னேஸ்வரன் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு பொன்தேவி பல நபர்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பொன்தேவி மற்றொரு நபரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்து, சிவகாசி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கரூர் விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் பொன்தேவி கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை போலீசார் பொன்தேவி மற்றும் புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகிய மூவரையும் கைது செய்து அழைத்து வந்து விசாரணை முடிந்து சிறையில் அடைக்க கூட்டிச்சென்றனர்.
விக்னேஸ்வரன் திருமணத்தின்போது பொன்தேவிக்கு 8 பவுன் அளவு தாலி செயின், மோதிரம், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பொன்தேவியின் சொந்த ஊர் தேனி மாவட்டம், கம்பம் என்றும், அவரது முதல் கணவர் கார்த்திக் எனவும், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.