மயிலாடுதுறை மாவட்ட மதிமுக செயலாளராக பொறுப்பு வகித்த இ.மார்க்கோனி கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அப்பதவியில் இருந்து கடந்த திங்கள்கிழமை நீக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் மார்கோனி அதிமுக நிர்வாகிகளை சந்தித்து அக்கட்சியில் சேர்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட மதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில், மதிமுகவுக்கு ஊறுவிளைவிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. வைகோவின் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்ட மதிமுக தொடர்ந்து செயல்படும் என்றும் புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோரை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் மாற்றுக் கட்சியில் இணைய திட்டமிட்டதாக கிடைத்த செய்தி காரணமாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருந்த மார்கோனி கட்சி பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் வைகோவால் நீக்கப்பட்டுள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொலை வழக்கில் சிக்கிக்கொண்டு, மார்கோனி நாகர்கோயிலில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்ட வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தன்னை ஆள்வைத்து கொன்றுவிடுவார் என பயமாக உள்ளது என்று சொன்னபோது, வைகோதான் அவரைக் காப்பாற்றினார். இன்று பணத்தை வைத்து எதையும் சாதித்து விடலாம் என்று மார்கோனி நினைப்பது மதிமுகவில் நடக்காது என்றார். அப்போது, மதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.