சென்னையை அடுத்த ஆவடி முக்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20). லாரி நிறுவனம் ஒன்றில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வந்தார். பிறந்த நாள். நண்பர்களுடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். மது விருந்தும் அமர்க்களப்பட்டது. பின்னர் விக்னேஷ் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்தார். உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் கடற்கரை பகுதியில் நண்பர்கள் உற்சாகமாக சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு கடைகளில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலர், விக்னேஷ் மற்றும் நண்பர்கள் சத்தம் போடாமல் இருக்குமாறு கூறினர். இதனையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதமும் அடி-தடி மோதலும் ஏற்பட்டது. விக்னேசையும், அவரது நண்பர்களையும், கடை ஊழியர்கள் கட்டையால் அடித்து விரட்டினர். இதில் விக்னேசுக்கு பலத்த அடிபட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து பரிதாபமாக இறந்து போனார். கடை ஊழியர்களின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்னேசின் நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காலையில் கடற்கரை மணலில் நடை பயிற்சி செய்ய வந்தவர்கள், விக்னேஷ் பிணமாக கிடப்பதை பார்த்து, அண்ணாசதுக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.இது தொடர்பாக மெரினா கடற்கரை கடை ஊழியர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். கடைகளில் திருட வந்தவர்கள் என்று நினைத்து தாக்குதல் நடத்தி விட்டோம் என்று அவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். அண்ணாசதுக்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
