மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை பந்தய சாலை பகுதி முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர வைத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது…
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மீடியா டவர் மற்றும் பந்தய சாலை முழுவதும் பிங்க் நிற ஒளியால் ஒளிரச் செய்யப்பட்டது.திடீரென அப்பகுதி முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிரவே அங்கிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் அதனை வரவேற்றனர்.இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப்,மாநகர காவல் துணை ஆணையர் சந்திஸ் ஆகியோர் புற்று நோய்க்கு எதிராக கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.
மார்பக புற்றுநோயை குறிக்கும் வகையிலும் நோயாளிகளின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவும் பிங்க்
நிறம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. பிங்க் வண்ண ரிப்பன் உலகம் முழுவதும் மார்பக புற்றுநோயின் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது.
மார்பக புற்றுநோயை வெற்றி கொள்வதில் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அடையாளமாகவும் பிங்க் வண்ணம் இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பந்தய சாலை முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர செய்யப்பட்டதால் பொதுமக்கள் பரவசத்துடன் அதனை கண்டு ரசித்தனர்.மார்பக புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை எனவும் அதற்கான அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் தங்களது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் துணை தலைவர் தேவி பழனிசாமி தெரிவித்துள்ளார்.