சத்தீஸ்கர் – ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. குலாரிகாட் எனப்படும் இங்கு ஏராளமான மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக சத்தீஸ்கர் அரசுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து ரிசர்வ் போலீஸ் படை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை, கமாண்டோ பிரிவினர் சிறப்பு நடவடிக்கை குழு ஆகியோர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கடந்த 19ம் தேதி நள்ளிரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மறுநாளும் இந்த மோதல் நீடித்தது. இச்சண்டையில் மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதியான ஜெயராம் ரெட்டி என்கிற சலபதியும் (55), கொல்லப்பட்டார். அரசு பணியை உதறிவிட்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய பிரிவின் மூத்த தலைவரான சலபதி கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சலபதி, தமிழக ஆந்திர எல்லையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், தவனம்பல்லி அருகே உள்ள மத்தியம்பைபல்லி கிராமத்தை சேர்ந்தவராவார். சலபதி என்கிற ஜெய்ராம் ரெட்டிக்கு இரண்டு அண்ணன்கள். இதில் ஒருவர் ஆந்திர மாநில பட்டுநூல் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இவரது மகன் இன்னமும் அதே கிராமத்தில்தான் வசித்து வருகிறார். ஆந்திர அரசின் பட்டுநூல் துறையில் சலபதி பணியாற்றி உள்ளார். இவர் சித்தூர் அடுத்துள்ள மதனபல்லியில் உள்ள பட்டுநூல் துறை அலுவலகத்தில்தான் பணியாற்றினார். இவரை விசாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்தார்கள் என்றும், அப்போதுதான் மாவோயிஸ்ட்களுடன் ஜெய்ராம் ரெட்டிக்கு பழக்கம் ஏற்பட்டது அதன் பின்னரே மாவோயிஸ்ட் சலபதியாக மாறிய அவர் தனது அரசு வேலையை உதறிவிட்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு தலைமறைவானார். விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாவோயிஸ்ட் உறுப்பினரான அருணாவை, சலபதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்னர் சலபதி ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் சுற்றி திரிந்து மாவோயிஸ்ட்களின் முக்கிய தலைவராக சலபதி மாறினார். 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி திருமலை பிரம்மோற்சவம் தொடங்கப்பட்டது. அதற்கு முதல்நாளே அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க மாலை காரில் அலிபிரி வழியாக திருமலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கண்ணிவெடி வெடித்தது. இதில் சந்திரபாபு நாயுடு உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதிருஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் சலபதி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டில், தெலுங்கு தேசம் கட்சியின் அரக்கு தொகுதி எம்எல்ஏ-வான கிடாரி சர்வேஸ்ர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ சீவேரி சோமலா ஆகியோர் மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதிலும் சலபதி முக்கிய பங்கு வகித்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இவரை உயிரோடு அல்லது பிணமாக பிடித்து கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்குவதாகவும் ஒடிசா மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த சலபதி யார் ? அவர் எப்படி இருப்பார் ? என்பதே போலீஸார் உட்பட பலருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், மாவோயிஸ்ட் அருணாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு செல்பி எடுத்து கொண்டனர். அதே ஆண்டு நக்சல்களுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு மொபைல்போன் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது. அதில் ஜெய்ராம் ரெட்டி என்கிற சலபதி, மனைவியுடன் எடுத்துக் கொண்ட செல்பி மூலம் அவர் பாதுகாப்பு படையினரின் கவனத்தை பெற்றார். இதனையடுத்து அவரை பிடிக்க தீவிர முயற்சி நடந்தது. தற்போது நடந்த என்கவுன்டரில் ஜெய்ராம் ரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டது, அந்த செல்பி மூலம் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி
- by Authour