யானை வரும் பின்னே – மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி … அதே போல் தமிழகத்தில் உள்ள சைவ வைணவ ஆலயங்களில் ராஜ மரியாதையோடு யானை முன் செல்ல – இறைவனே யானைக்கு பின்னர் தான் ஊர்வலமாக வரும் வழக்கம் நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆலயங்களில் வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் தேரோட்டம் முதற்கொண்டு தெப்ப திருவிழா – சிறப்பு அபிஷேக ஆராதனை – நாள்தோறும் நடைபெறும் மூன்று கால பூஜை என்று எல்லாவற்றிலும் திருக்கோவிலில் உள்ள யானை பங்கேற்கும்.
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள யானை ஆண்டாளும் தினசரி பூஜைகளில் கலந்து கொள்ளும். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அன்போடு
நடந்துகொள்ளும். ரெங்கநாதரை தரிசிக்க வரும் பக்தர்கள் ஆண்டாளை பார்க்காமல் செல்வது இல்லை. அந்த அளவுக்கு பக்தர்களிடம் நெருக்கமாக உள்ள ஆண்டாளுக்கு நேற்று 45 வது பிறந்தநாள். இதையொட்டி காலை கோயிலில் ஆண்டாளுக்கு பிறந்தநாள் விழா அமர்க்களமாக கொண்டாடப்பட்டது.
பிறந்த நாளை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் காலையிலேயே சிறப்பாக குளியலை போட்டு வந்தது. அதைத்தொடர்ந்து ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முதுகில் வண்ணமயமான துணி போர்த்தப்பட்டு தலையில் பிறை வடிவில் அலங்கார மணிகள் அணிவிகப்பட்டது. அதுபோல கழுத்தில் கலகலவென ஓசை எழுப்பும் மணிகள் அடங்கிய மாலை அணிவிக்கப்பட்டு மேடைக்கு அழைத்து வரப்பட்ட யானை ஆண்டாளுக்கு அங்கு அன்னாசி, தர்பூசணி, சப்போட்டா, முலாம்பழம் மற்றும் சாக்லேட் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக கோயில் அதிகாரிகள், யானை பாகன்கள் எடுத்து ஆண்டாளுக்கு ஊட்டி விட்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஹேப்பி பர்த்டே டூ ஆண்டாள் என வாழ்த்து கூறினர். அந்த வாழ்த்தை ஆமோதித்து ஏற்பது போல ஆண்டாள் தலையை ஆட்டியது. அப்போது மணிகள் கலகலவென ஓசை எழுப்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தன்னை வாழ்த்திய பக்தர்களை ஆண்டாள் வெறுங்கையுடன் அனுப்பவில்லை. சாக்லேட் வைக்கப்பட்டிருந்த கூடையை எடுத்து பக்தர்களுக்கு கொடுத்தது. பக்தர்கள் ஒவ்வொருவரும் சாக்லேட் எடுத்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு கை சேவை மேற்கொள்வதற்காக 1986 ம் ஆண்டு யானை ஆண்டாள் வரவழைக்கப்பட்டது – கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட முதல் நாளிலே தங்க குடத்தில் புனித நீரோடு ஆண்டாள் ஆலயத்திற்கு உள்ளாக கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.