பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.01.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை என்பவர் தனது மகளுக்கு சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியிடம் மனு வழங்கினார்.
அந்த மனுவில், தனது மகளுக்கு 8 வயதாக இருக்கும்போது காய்ச்சல் வந்தது. அப்போது முதல் கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவரால் தனியாக எந்த இடத்திற்கு சென்று வர முடியாமல் போனது. பத்துமாதம் வயிற்றில் சுமந்த மகளை 08 வயது முதல் என் முதுகில் சுமந்து வருகிறேன். அதற்காக பல இடங்களில் மருத்துவ சிகிச்சை அளித்தும் எந்தவித பயனும் இல்லை. எனது மகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உதவித்தொகை கொண்டுதான் எனது மகளுக்கு மருந்து செலவு பார்த்து வருகிறேன். எனது கணவர் கூலி வேலை பார்த்து வந்தார். தற்போது வயது முதிர்வின் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமை தொகையும் மாதம் ரூ.1,000 கிடைக்கிறது. இது மிகவும் உதவியாக உள்ளது. அதேபோல் எனது மகளுக்கு சக்கர நாற்காலி வழங்கினால் பெரிதும் உதவியாக இருக்கும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன்.
அந்த மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் உடனடியாக பூங்கோதை என்பவரின் மகள் தமிழ் இலக்கியா என்பவருக்கு சக்கர நாற்காலியினை வழங்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 நிமிடத்திற்குள் சர்க்கர நாற்காலி வழங்கப்பட்டது.
சக்கர நாற்காலியினை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி பெண்ணின் தாயார் என் 20 ஆண்டுகால மன வலிக்கு இன்று தீர்வு வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும நன்றிகளை தெரிவித்தார்.