Skip to content
Home » திரிஷாவே மன்னித்துவிடு…உன் திருமணத்திற்கு வந்து வாழ்த்துவேன்…. மன்சூர் அலிகான் அறிக்கை

திரிஷாவே மன்னித்துவிடு…உன் திருமணத்திற்கு வந்து வாழ்த்துவேன்…. மன்சூர் அலிகான் அறிக்கை

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.   இதையடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு ஆஜராகக்கோரி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அவர்  கூறியிருப்பதாவது:

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை! சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண், மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவழும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை.

ஆம்! பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார்.

இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்! எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *