பல்வேறு வழக்குகளில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாயை ஏமாற்றிய குற்றசாட்டு இவர் மீது உள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததுடன் அவருக்கு மோசடி பணத்தில் பல கோடிக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தும் இருந்தார்.
இதனால் ஜாக்குலினிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தங்களது குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் சேர்த்துள்ளனர். சுகேஷ் தன்னை வழக்கில் சிக்க வைத்து விட்டதாகவும் அவரது குற்றச் செயலில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோர்ட்டில் ஜாக்குலின் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் சுகேஷ் மீது டில்லி போலீசில் ஜாக்குலின் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் ”சுகேஷ் சிறையில் இருந்து கொண்டு கோர்ட்டில் உண்மையை சொல்லக் கூடாது என்று என்னை மிரட்டுகிறார். துன்புறுத்துகிறார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரால் எப்படி வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு பேசமுடிகிறது என்பதை போலீஸ் கமிஷனர் விசாரிக்க வேண்டும்” என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.