Skip to content
Home » மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறுகிறது..

மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறுகிறது..

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 9.51 மணி அளவில் காலமானார். இதையடுத்து, டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு, தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு விழாக்களும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. மன்மோகன் சிங் உடல் இன்று காலை 8.30 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு 9.30 மணி வரை தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர், காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. டெல்லியில் யமுனை நதிக் கரையான நிகம்போத் காட் பகுதியில் சீக்கிய மத முறைப்படி இன்று காலை 11.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன. இதில் இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.