முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இரு தலைவர்களின் உருவப்படங்களை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது”
மன்மோகன் சிங்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் காங்கிரசின் இரு தூண்கள். மன்மோகன் சிங் 10 வருடம் பிரதமராக இருந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் தான் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, ஆதார் அட்டைகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். மன்மோகன் சிங் ஆட்சியில், 21 அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்றனர். முக்கிய துறைகள் கொடுக்கப்பட்டன. பொருளாதார திட்டங்களை கொண்டு வந்தார். அவர் உலக பொருளாதார மேதை , அவரது ஆலோசனைகள், திட்டங்களால் தான் இந்திய பொருளாதாரம் வளர்ந்தது. சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வந்தார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், கடல் சார் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், சேது சமுத்திர திட்டம் தொடக்கம் என பல திட்டங்களை கொண்டு வந்தவர். தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக இருந்தார் மன்மோகன் சிங்.
இளங்கோவன் மறைவு தாங்கி கொள்ள முடியாதது. என்னை எப்போது பார்த்தாலும் உடல் நலம் விசாரிப்பார். என்னை எம்.எல்.ஏ., ஆக்கிட்டீங்க. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்று இளங்கோவன் கூறினார்.
ஈவெகி சம்பத், அண்ணாவுக்கும், கலைஞருக்கும் நெருக்கமானவர், இளங்கோவன் திமுகவை விமர்சிப்பார். ஆனால் கலைஞர் அவரை திருப்பி விமர்சிக்க மாட்டார், இளங்கோவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக விமர்சிப்பார். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் உறுதியாக இருப்பார். இதுதான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று நமது ஆட்சியை பார்த்து கூறினார்.
எந்த பதவியில் இருந்தாலும் அதில் முத்திரை பதித்தவர் இளங்கோவன் அவர்கள். இவர்களின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கும் இழப்பு தான். இளங்கோவன் கடைசி நேரத்தில் கூட என்னிடம் பேச நினைத்தார். ஆனால் முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.