மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மெய்தி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பல நாட்கள் அமைதிக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடந்தது. இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். மணிப்பூர் காவல்துறை இதை தெரிவித்து உள்ளது. 7 பேருக்கு குண்டு காயம் அல்லது பிற காயங்கள் ஏற்பட்டுள்ளது.
கொய்ரென்டாக் பகுதியுள்ள கிராமத்தில் 30 வயதான ஜங்மின் லுன் காங்டே என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். அவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார். மற்றொரு சம்பவத்தில் தினுங்கே பகுதியை சேர்ந்த 40 வயதான விவசாயி சலாம் ஜோதின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார். கொய்ரெண்டாக் மற்றும் தினுங்கே பகுதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.