மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணிப்பூர் மாநில நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய நாடாளுமன்றத்தின் இருஅவைகளைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் அடங்கிய (I.N.D.I.A) எம்.பி.க்கள் குழு டெல்லியில் இருந்து நேற்று (சனிக்கிழமை) மணிப்பூர் சென்றனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக இந்தக் குழு மாநில ஆளுநர் அனுசுயாவை ராஜ்பவனில் சந்தித்து அவரிடம் மனு அளித்தனர். இந்தக் குழுவில் இடம்பெற்று டில்லி திரும்பிய, திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மணிப்பூரில் குகி, மைத்தேயி, நாகாஸ் என்று யாராக இருந்தாலும், அவர்களில் யாருக்குமே அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை. இதுவரை முதல்வரோ, அமைச்சர்களோ அம்மக்களை சென்று சந்திக்காத ஒரு சூழலில், பல இடங்களில் மக்கள் பதாகைகளை ஏந்தியபடி போராடிக் கொண்டிருக்கின்றனர். Chief Minister is Missing , MLAs ere Missing என்ற வாசகங்களை முன்வைத்து அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கும் சூழலைத்தான் இன்றைக்கும் பார்க்க முடிகிறது. மணிப்பூரில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட இரு பெண்களை, எங்களது குழுவில் இருந்த பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்தோம். அப்பெண்கள் மிக மோசமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை சந்தித்தேன். அந்த தாய் தனது கணவரை இழந்திருக்கிறார். தனது மகளுக்கு இப்படிப்பட்ட மிக மோசமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதையும் தாண்டி தன்னுடைய மகனை அவரது கண் முன்னாலே கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், அவர்களை எதை சொல்லி தேற்றுவது, அந்த தாய்க்கு என்ன நம்பிக்கையை எங்களால் தர முடியும் என்று புரியவில்லை. பாதிக்கப்பட்ட தங்களுக்கு நியாயம், நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய தொடர் கோரிக்கையாக இருக்கிறது. இதேபோல், அங்கிருப்பவர்கள் மிகவும் வருந்துவது, எங்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தது. நாங்கள் கெஞ்சிக் கேட்டும் எங்களைக் காப்பாற்ற அவர்கள் முன்வரவில்லை. காவல்துறை வாகனம் இருந்தது. அந்த வாகனத்தில் எங்களை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் சென்று கேட்டோம். அதைக்கூட அவர்கள் செய்ய முன்வரவில்லை. ஆனால், எங்களை காப்பாற்றாமல் கைவிட்ட அந்த காவல்துறையினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர். மணிப்பூரின் அனைத்து இடங்களிலும் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் உள்ளனர். இதனால், அம்மாநிலம் அமைதியாக இருப்பது போல தெரிகிறதே தவிர, அங்கு அமைதி திரும்பவில்லை.
நேற்றும்கூட, பிஷ்னுபூர் என்ற இடத்தில் முகாமில் உள்ள மக்களைச் சந்தித்துவிட்டு வரும்போதுகூட, அங்கு ஒரு துப்பாக்கிச்சூடு நடந்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடிய சூழலை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். அந்த மாநிலத்தில் தொடர்ந்து ஆங்காங்கே வன்முறைகள் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே, அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று கூறுவது பொய். மாநிலத்தின் முதல்வரும், அரசும் தங்களது மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். அம்மாநிலத்தில் உள்ள மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கின்றனர். எனவே, அனைத்து தரப்பினரையும் அழைத்துப்பேசி ஒரு நிரந்தர அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு, அம்மாநில அரசும் உருவாக்க வேண்டும். குகி மற்றும் மைத்தேயி சமூகத்தினரிடம் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய வன்முறையாக வெடித்தது இல்லை. இந்த வன்முறையை அரசு தடுக்கவில்லை என்ற வருத்தம் அனைத்து குழுக்களிடமும் உள்ளது” என்று அவர் கூறினார்.