Skip to content

மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்று அவர்களுக்கு அவமதிப்பும் நடந்தது.

இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளிவந்து, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் கடந்த வாரம் பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்துள்ளார்.

அப்போது, கடைக்குள் சீருடையில் இருந்த பி.எஸ்.எப். வீரர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி கடையில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலானது.

இதில், சீருடையில் கையில் துப்பாக்கியுடன் தலைமை காவலர் சதீஷ் பிரசாத் என்பவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காட்சிகள் இருந்தன. வீடியோ வைரலான நிலையில், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. உள்மட்ட விசாரணை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் 2 பெண்களின் நிர்வாண ஊர்வலம் பற்றிய வீடியோ சமீபத்தில் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. அவர்கள் அதற்கு முன் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை மைனர் சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் பதுங்கியுள்ள மீதமுள்ள குற்றவாளிகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!