வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் தீவிரமடைந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று அதீத கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மிகக் கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.