சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் இன்று காலை நிலவரப்படி மணிக்கு 6 கி.மீட்டர் என்று இருந்தது. இந்நிலையில், புயலின் வேகம் மணிக்கு 11 கி.மீட்டராக அதிகரித்து நகர்ந்து வருகிறது.
சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் 460 கி.மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திராவை ஒட்டி வரும். அதன்பின்னர், நாளை(வெள்ளிக்கிழமை) புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயலின் நகரும் வேகம் மணிக்கு 6 கி.மீட்டரில் இருந்து 11 கி.மீட்டராக அதிகரித்துள்ளது
மாண்டஸ் புயல் காரணமாக வடதமிழகம், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், புயல் காரணமாக தரைக்காற்று வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.